திண்டுக்கல் அருகே டீக்கடை ஒன்றில் சிறுமி வாங்கிய மசால் வடையில் சுண்டெலி ஒன்று இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் நேற்று பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், 3 மசால் வடைகளை பார்சலாக வாங்கியிருக்கிறார். பின்னர், வீட்டுக்கு சென்றதும் அந்த வடைகளை சாப்பிடும் ஆர்வத்தில் ஆசையாக பிரித்து பார்த்துள்ளார். அப்போது அந்த வடைக்குள் கருகிய நிலையில் முழு சுண்டெலி இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்ததும் பயத்தில் அந்த சிறுமி அலறியுள்ளார். பின்னர், அங்கு வந்த அவரது பெற்றோரும் வடைக்குள் சுண்டெலி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த டீக்கடைக்கு சென்று இதுகுறித்து அவர்கள் கேட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்தவர்கள், தெரியாமல் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டதாகவும், விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் அந்த வடைக்குள் சுண்டெலி கிடந்ததை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். விஷயம் பூதாகரமானதை அடுத்து, ஆத்தூர் தாலுகா உணவு பாதுகாப்பு அதிகாரி ஜாபர் சாதி தலைமையிலான குழுவினர் அந்த டீக்கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தரமற்ற சமையல் எண்ணெய், திறந்தவெளியில் வைத்து பலகாரங்கள் தயாரிப்பது போன்ற சுகாதாரமற்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த டீக்கடைக்கு ரூ.3,000 விதிக்கப்பட்டது. ஒரு வடைக்குள் சுண்டெலி இருப்பதை கூட கவனிக்காமல் கொடுத்த டீக்கடைக்கு ரூ.3,000 மட்டும் அபராதம் விதிக்கப்பட்டால், எப்படி அவர்களுக்கும், மற்ற கடைக்காரர்களுக்கும் பயம் வரும் என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.