நாட்டின் ரயில் பாதைகளில் கால்நடைகள் குறுக்கே வந்து விபத்து நடப்பது அதிகரித்து வரும் நிலையில் இதைத் தடுக்க ரயில்வே அமைச்சகம் ஒரு மாஸ் திட்டத்தை தீட்டி உள்ளது.
நாட்டில் ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக விபத்துக்களை தவிர்க்க ஆள் இல்லாத காரணத்தில் ரயில்வே கிராசிங்கை முற்றிலும் சீர் செய்யும் பணியில் இந்திய ரயில்வே முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றது.
அதே வேளையில், ரயில்வே பாதைகளில் மாடுகள், யானைகள் உள்ளிட்ட கால்நடைகளும், விலங்குகளும் மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதனால் ரயில் பெட்டியும் சேதமடைகின்றது. அதை சீரமைக்க தனி நிதி ஒதுக்கப்படுகின்றது. இதற்கெல்லாம் ஒரு தீர்வாக இந்திய ரயில்வே இந்த திட்டத்தை யோசித்துள்ளது.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்பட்டதில், கால்நடைகள் உயிரிழப்பதுடன் ரயிலின் முன்புறமும் சேதமடைந்து சேவை பாதிக்கப்பட்டது. இது போன்ற பாதிப்புகளை தடுக்கும் விதமாக நாட்டில் உள்ள ரயில் பாதைகளில் சுமார் 1,000 கிமீ தூரம் சுற்றுச்சுவர் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கூறியதாவது, ’’இந்த சுற்றுச்சுவரை அமைக்க பல்வேறு டிசைன்கள் ஆலோசிக்கப்பட்டு, ஒன்றை தேர்வு செய்துள்ளோம். அடுத்த 5-6 மாதங்களில் 1,000 கிமீ தூரத்திற்கு சுவர் கட்ட திட்டமிட்டுள்ளோம். டிசைன் சரியாக வந்தால் இந்த திட்டம் விரிவாக்கப்படும்.அதேவேளை, இந்த சுவர் அமைப்பதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதிலும் கவனம் கொண்டுள்ளோம்’’. என தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4,000 ரயில்கள் மீது கால்நடைகள் மோதி விபத்து ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் மும்பை – அகமதாபாத் வந்தே பாரத் ரயில் மீது கால்நடை மோதி தொடர் விபத்து ஏற்பட்டது. வடக்கு ரயில்வேயின் டெல்லி- மும்பை ரயில் பாதைகள், டெல்லி- ஹவுரா ரயில் பாதைகளில் தான் நாட்டின் ரயில் கால்நடை விபத்தின் பெரும் பங்குகள் பதிவாகின்றன