மங்களூருவில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் சூரத்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனது கடை முன் ஜலீல் என்பவர் நேற்றிரவு நின்று கொண்டிருந்துள்ளார். அவரை அடையாளம் தெரியாத இருவர், திடீரென தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஜலீல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் எதிரொலியாக மங்களூருவுக்கு உட்பட்ட சூரத்கல், பாஜ்பே, காவூர் மற்றும் பனம்பூர் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருகிற 27ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வேறு எந்தவித வன்முறையும் பரவி விடாமல் இருப்பதற்காக இந்த உத்தரவை நகர ஆணையர் பிறப்பித்துள்ளார். இதேபோன்று, வருகிற 27ஆம் தேதி காலை 10 மணி வரை மதுபான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.