நிலவின் சந்திரயான் – 3 திட்டத்தை தொடர்ந்து சமுத்திராயன் எனப்படும் ஆழ்கடல் ஆய்வு முயற்சிக்கு இந்திய விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் தாதுக்களைத் தேடுவதற்காக நீர்மூழ்கி கப்பல் உருவாக்கப்படுகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த கப்பல் 6,000 மீட்டர் நீருக்கடியில் 3 நபர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
‘மத்ஸ்யா 6000’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல், சுமார் இரண்டு ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை கடற்கரையில் இருந்து வங்காள விரிகுடாவில் அதன் முதல் கடல் சோதனை நடத்தப்பட இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் போது மாயமானதன் விளைவாக, விஞ்ஞானிகள் மத்ஸ்யா 6000 இன் வடிவமைப்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நீர்மூழ்கி கப்பலை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி எனப்படும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இத்திட்டம் பற்றி புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம். ரவிச்சந்திரன் கூறுகையில், “ஆழ்கடல் ஆய்வின் ஒரு பகுதியாக சமுத்திரயான் பணி நடந்து வருகிறது. 2024 முதல் காலாண்டில் 500 மீட்டர் ஆழத்தில் கடலில் சோதனை நடத்த உள்ளோம்” என்றார்.
இதுகுறித்து தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஜி.ஏ.ராமதாஸ் கூறுகையில், “மத்ஸ்யா 6000 நீர்மூழ்கி கப்பல் 2.1 மீட்டர் விட்டம் கொண்டது. 3 நபர்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6,000 மீட்டர் ஆழத்தில் 600 பார் அளவுக்கு அபரிமிதமான அழுத்தத்தைத் தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 96 மணிநேர ஆக்சிஜன் சப்ளையுடன், 12 முதல் 16 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்” என்றார்.
இந்தப் பணி 2026ஆம் ஆண்டுக்குள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்பும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.