மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி உத்திராபதியார் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார்(36) கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நலமுத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகள் மதுபாலா(28) இவர்கள் இருவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது மேலும் இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
திருமணத்தின் போது பெண் வீட்டார் 17 சவரன் தங்க நகைகள் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக சொல்லப்படுகிறது. தற்சமயம் செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் செந்தில்குமார் மற்றும் அவருடைய வீட்டில் இருப்பவர்கள் மேலும் 10 லட்சம் ரூபாய் பணம், 10 சவரன் தங்க நகை உள்ளிட்டவற்றை கேட்டு கடந்த 4️ மாதங்களாக மதுபாலாவை கொடுமைப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், கடந்த 16ஆம் தேதி தில்லையாடி வீட்டில் மதுபாலா மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில், உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த மதுபாலாவின் குடும்பத்தினர் உடனடியாக தில்லையாடிக்கு சென்று செந்தில்குமார் குடும்பத்தார்மீது காவல்நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரின் அடிப்படையில், பொறையார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆகின்ற நிலையில், ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, மதுபாலாவின் உடல் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கு நடுவே செந்தில்குமார் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு அவரிடம் காவல்துறையினர் மற்றும் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தான் செந்தில்குமார் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என மதுபாலாவின் உறவினர்கள் அவருடைய உடலை வாங்க மறுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.