எம்.பி.பி.எஸ். – பி.டி.எஸ். படிப்பில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்ற மாணவர்கள் வரும் 4ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேரவேண்டும் என்றும் இல்லாவிடில் காலியிடமாக அறிவிக்கப்படும் என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் முதல் சுற்று கவுன்சிலிங்கிற்கு பின் 1670 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஆக. 21ல் துவங்கியது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதுகுறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலர்முத்துசெல்வன் கூறியதாவது: இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் அரசு கல்லுாரிகளில் உள்ள இடங்கள் நிரம்பின. அதேநேரம் சுயநிதி பல் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் 156 – நிர்வாக ஒதுக்கீட்டில் – 87 என 243 பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.
அதேபோல் சுயநிதி கல்லுாரிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் 87 நிர்வாக இடங்கள் காலியாக உள்ளன. தற்போது ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் வரும் 4ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கல்லுாரிகளில் சேரவேண்டும். இல்லாவிடில் காலியிடமாக அறிவிக்கப்பட்டு அடுத்தகட்ட கவுன்சிலிங் கில் நிரப்பப்படும் என்று கூறினார்.