fbpx

தமிழகத்தில் மீதமுள்ள 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி..! வெளியான முக்கிய அறிக்கை..!

தமிழகத்தில் மீதமுள்ள 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசு கைவிரித்த நிலையில், தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனால், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவிக்கு வாய்ப்பில்லை என்பதால், மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய அண்மையில் பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை. அந்த மாவட்டங்களிலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருந்தது.

தமிழகத்தில் மீதமுள்ள 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி..! வெளியான முக்கிய அறிக்கை..!

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் கொள்கை ஆகும். தமிழ்நாட்டை இப்போது ஆளும் திமுகவும், ஆட்சி செய்த அதிமுகவும் இக்கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மட்டுமே மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், மீதமுள்ள17 மாவட்டங்களிலும் மாநில அரசின் நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது சாத்தியமல்ல. தமிழ்நாட்டிற்கு அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தேவைப்பட்ட தருணத்தில் நாடு முழுவதும் பின் தங்கிய மாவட்டங்களில் 157 மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளுடன் இணைந்து அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

தமிழகத்தில் மீதமுள்ள 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி..! வெளியான முக்கிய அறிக்கை..!

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 58 மருத்துவக்கல்லூரிகள், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 24 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் தமிழகத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட ஒதுக்கப்படாத நிலையில், மூன்றாவது கட்டமாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்திற்கு குறைந்தது 15 கல்லூரிகளை ஒதுக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியது. பாமக வழங்கிய ஆலோசனைப்படி முந்தைய அதிமுக அரசு மேற்கொண்ட முயற்சியால் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு அது போதுமானதல்ல.

எனவே, மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மாற்று வழிகள் என்னென்ன உள்ளன என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும். மத்திய அரசு 3 கட்டங்களிலும் ஒட்டு மொத்தமாக அறிவித்த 157 மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை 102 கல்லூரிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 55 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட போதிலும் நிலம் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவை இன்னும் அமைக்கப்படவில்லை. மற்றொருபுறம், சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு 17 கல்லூரிகள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது 6 மாவட்டங்களில் மட்டும் தான் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகக் கூடிய இலக்கு தான் என்பதால் நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் தலா 3 மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் அமைக்க முன்வர வேண்டும். அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கும் வகையில், அவற்றுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, தேவையான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிமுக பொதுக்குழு விவகாரம்.. ஓபிஎஸ் தரப்புக்கு அடுத்த சிக்கல்...

Thu Jul 28 , 2022
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.. கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, […]

You May Like