நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. படித்த பெண்கள் கூட, அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே குழந்தைகளை கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். பெண்கள் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே பொறுப்பானவர்கள் என்ற ஆணாதிக்க எண்ணமே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று, இதனை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது.
IZA – Institute of Labor Economics என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்திய திருமணத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் தவிர்க்கப்படுவதாக தெரிவிக்கிறது. நாட்டில் உள்ள முன்னணி டிஜிட்டல் திருமண தளங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கிடைக்கும் வரவேற்பை இவர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆய்வில், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை விட, வீட்டில் இருக்கும் பெண்களே கூடுதலாக 15% அபிப்பிராயங்கள் பெற்றுள்ளனர்.
வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில், தீவிர உடலுழைப்பில் உள்ள பணிகளில் பணிபுரிந்து வரும் பெண்கள் மிக மிக குறைந்த அபிப்பிராயங்களை பெற்றுள்ளனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த போக்குகளை டெல்லி, பெங்களூரு என இரண்டு பெருநகரங்களுடன் ஒப்பிட்டனர். பெங்களூரை விட, டெல்லியில் உழைப்பில் ஈடுபட்டு சம்பளம் பெற்று வரும் பெண்கள் திருமணத்தில் அதிகம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் நிலவும் பாலின சமத்துவம் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றனர்.
அதேபோல், சமூகத்தில் நிலவும் சாதிய தன்மைக்கும், பெண்கள் வாய்ப்புக்கும் இடையிலான உறவுகளையும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வேலைக்கு செல்லும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பெண்களை விட உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்களே அதிகம் நிராகரிக்கப்படுவதாக கூறுகின்றனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை விட, முற்பட்ட வகுப்பினரிடத்தில் பால்ரீதியான வேலைப் பிரிவினை அதிகம் வேரூன்றி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சமூக ஒழுக்கமுறை, பால்ரீதியான கற்பொழுக்கம் உள்ளிட்டவைகள் வேலைக்கு செல்லும் சுதந்திரத்தை பெண்களுக்கு மறுப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Read more ; வெட்டினால் இரத்தம் வரும் அதிசய மரம்!! காரணம் என்ன தெரியுமா?