உலகக் கோப்பைப் போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியிருந்த அர்ஜென்டினா கால்பந்து கேப்டன் லியோனல் மெஸ்ஸி, தற்போது கோப்பையை வென்றதால் தனது முடிவை மாற்றியுள்ளார்.
தோஹா: உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பரபரப்பான பைனலில், அசத்திய அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நேற்றைய பெனால்ட்டி ஷூட் அவுட் வெற்றியின் மூலம் 6 வெற்றிகளுடன் அதிகப்படியான பெனால்ட்டி ஷூட் அவுட்களில் வென்ற அணி என்ற பெருமையை அர்ஜென்டினா பெற்றது. உலகக்கோப்பை ஆட்டங்களில் 26வது ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் அதிக உலகக்கோப்பை ஆட்டங்களில் விளையாடியவர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றார். 7 கோல்களை அடித்ததோடு, மூன்று கோல்களுக்கு உதவி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி தங்கப் பந்து விருது பெற்றார். உலகக்கோப்பை ஆட்டங்களில் ஏற்கெனவே 2014ஆம் ஆண்டிலும் இதேபோல் தங்கப்பந்து விருதினை மெஸ்ஸி வென்றிருந்தார். இதன்மூலம், இருமுறை தங்கப்பந்து விருதினை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.
இந்நிலையில் 22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டியோடு ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்த மெஸ்ஸி, தற்போது சாம்பியன் பட்டத்தை வென்றதும், தனது ஓய்வு முடிவை மாற்றி, உலக சாம்பியனாக தொடர்ந்து விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மெஸ்ஸி,
“என் குடும்பத்தாருக்கும், என்னை ஆதரித்த அனைவருக்கும் மற்றும் எங்களை நம்பிய அனைவருக்கும் மிக்க நன்றி. நாம் ஒன்றாகப் போராடி ஒன்றுபட்டால் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளோம், விரைவில் சந்திப்போம்” என பதிவிட்டுள்ளார். மெஸ்ஸியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.