சூடான் நாட்டில் மக்கள் வசிக்கும் பகுதியில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் சுமார் 46 பேர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடான் ராணுவ போக்குவரத்து விமானம், செவ்வாய்க்கிழமை இரவு வாடி சீட்னா விமான தளத்திற்கு அருகில் குடியிருப்பு பகுதியில் மோதியதில் 46 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கார்ட்டூமின் வடமேற்கே உள்ள ஓம்டுர்மானில் உள்ள இந்தத் தளம் ராணுவத்தின் மிகப்பெரிய ராணுவ மையங்களில் ஒன்றாகும்.
அந்த விமானம் அரசாங்கத்தின் தலைமையகமான போர்ட் சூடானின் செங்கடல் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்துள்ளது. விமானத்தில் உயர் ராணுவ அதிகாரிகள் இருந்ததாக வெளியான செய்திகளை ராணுவம் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 46ஐ எட்டியுள்ளது. 10 பேர் காயமடைந்தனர்.
ஓம்துர்மான் என்ற பகுதியில் மக்கள் பலர் வசிக்கும் இடத்தில் விமானம் பலமாக வெடித்து சிதறியது. இதில், அந்த வீட்டில் இருந்தோர், சாலையில் சென்றவர்கள் என பலரும் தீப்பற்றி பரிதாபமாக பலியாகியுள்ளனர். குழந்தைகள் உட்பட காயமடைந்த பொதுமக்களை அவசரகால மீட்புப் பணியாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும், அடர்ந்த புகை மூட்டம் ஏற்பட்டதாகவும், பல வீடுகள் சேதமடைந்ததாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.