தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேற்று சென்னை கொத்தவால்சாவடி தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையின் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3,516 ரேஷன் கடைகள் சொந்த கட்டிடத்திலும், 24,179 ரேஷன் கடைகள் பொது கட்டிடங்களிலும், 7,952 ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களிலும் இயங்கி வருகிறது.
ரேஷன் கடைகளுக்கு வரும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் விரைந்து பொருட்களை வாங்கி செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி மினி சூப்பர் மார்க்கெட் மூலம் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6,500 பணியிடங்களுக்கு தற்போது நேர்முக தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தகுதியுள்ள நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.