பெண் பயணியை விரட்டிச் சென்று மினி பஸ் டிரைவர்கள் இருவர் காதல் தொல்லை கொடுத்ததால் , அந்தப்பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குமரியில் அரங்கேறி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த காரியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார்-சுஜிலா தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுஜிலா பார்மசிஸ்ட் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு வந்த இவர் 4-பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டின் சமயலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அங்கு சென்ற குளச்சல் போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு 4-பக்க கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மினி பேருந்தின் மூலம் வேலைக்கு சென்று வந்த போது பழக்கமான இரு பேருந்து ஓட்டுனர்கள் சுஜிலாவிடம் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இருவரும் சுஜிலாவுக்காக சண்டையிட்டுக் கொண்டதாலும் அவர் அவமானம் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது. சுஜிலா எழுதிய தற்கொலைக் கடிதத்தில், பேருந்து நிலையத்தில் அசிங்கப்பட்டு விட்டதாக எழுதப்பட்டிருந்தது. சஜிலா-வின் தற்கொலைக்கு அந்த மினிபஸ் டிரைவர்கள் கொடுத்த காதல் தொல்லைதான் தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியதோடு, சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பும் சுஜிலாவை டிரைவர்கள் இருவரும், விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தி கையைப்பிடித்து இழுத்து காதல் தொல்லை கொடுக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.