அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்தனர். இந்நிலையில், தற்போது அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட அறைகளை திறந்தும் சோதனை நடத்துகின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள், சென்னையில் அவருக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் நடைபெற்றது. இந்த சோதனையில் சில இடங்களில் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.