தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை என அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80 முதல் 120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது.
சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 முதல் ரூ.68 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பண்ணைப் பசுமைக் கடைகள் சென்னையில் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதாலும், அக்கடைகளில் வழக்கமாக விற்கப்படுவதைப் போன்று மிகக்குறைந்த அளவிலேயே தக்காளி போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சந்தையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தக்காளியை பருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.