ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் பட்டியல் தொகுப்பைத் தனிப்பயனாக்க ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசி- க்கு நெகிழ்வுத் தன்மையை வழங்கியுள்ளது.
ரயில்களில் உணவு வழங்கல் சேவைகளை மேம்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள், பருவகால உணவு வகைகள், பண்டிகைக் கால உணவுகள், பயணிகளின் தேவை மற்றும் விருப்பத்துக்கேற்ற உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் உணவுப் பட்டியல் தொகுப்பை இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமான ஐஆர்சிடிசி-க்கு வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு, சிறு தானிய அடிப்படையிலான உள்ளூர் தயாரிப்புகள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவு விருப்பத் தேர்வுகள் இதில் அடங்கும். அதன்படி, பின்வரும் அம்சங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கட்டணத்தில் உணவுக்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ள, முன்கூட்டியே உணவுக்கான கட்டணம் செலுத்தும் ரயில்களில், உணவுப் பட்டியலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்குள் ஐஆர்சிடிசி முடிவு செய்யும்.
கூடுதலாக, இந்த ப்ரீபெய்ட் உணவுக் கட்டண ரயில்களில், தனிப்பட்டியல் உணவுகள் மற்றும் பிராண்டட் உணவுப் பொருட்களை குறைந்தபட்ச சில்லறை விலையில் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படும். அத்தகைய தனிப்பட்டியல் உணவுகளின் பட்டியல் மற்றும் கட்டணத்தை ஐஆர்சிடிசி முடிவு செய்யும்.