இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற திட்டம் போட்டு வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே, கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால், ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.
இந்நிலையில், ‘சுக்கோட்’ விடுமுறையன்று நடத்தப்பட்ட நோவா இசை நிகழ்ச்சியில் இவர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றன. சுக்கோட் என்பது யூத மதத்தில் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகைகளில் ஒன்றாகும். இலையுதிர் அறுவடையைக் கொண்டாடும் விதமாக ஒரு வாரத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. இந்த நாட்களில் நண்பர்கள், குடும்பங்கள், உறவினர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்வது வழக்கமாகும்.
இந்நிலையில், நேற்று இந்த சுக்கோட் விடுமுறையின் கடைசி நாளாகும். எனவே, காசாவுக்கு அருகில் கிப்புட்ஸ் ரெய்ம் பகுதியில் ‘நோவா’ எனும் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 3000-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த சமயத்தில்தான் கச்சேரிக்குள் ஊடுறுவிய ஹமாஸ் படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சுமார் 260 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் தலைதெறிக்க ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகு இசைக்கச்சேரி நடந்த பகுதி அப்படியே மயான அமையாக காட்சியளிக்கிறது. பல லட்சம் மதிப்புள்ள கார்களை விட்டுவிட்டு மக்கள் உயிருக்கு பயந்து தப்பி சென்றுள்ளனர். சாலையிலிருந்து அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இவையெல்லாவற்றிற்கும் உச்சக்கட்டமாக 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஹமாஸ் படையினரால் பைக்கில் கடத்திச் செல்லப்படும் வீடியோவும் வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமான போராளிகள் மத்தியில் நிராயுதபாணியாக உள்ள அப்பெண்ணின் காதலன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண் ‘அர்கமணி’ என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர் தற்போது என்ன நிலைமையில் இருக்கிறார் என்கிற விவரங்கள் ஏதும் தெரியவில்லை.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் 700-க்கும் அதிகமானோரும், காஸாவில் 413 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஹமாஸ் படையினர் இதுவரை குறைந்தது 100 பணயக்கைதிகளை பிடித்துச் சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.