நவம்பர் மாதம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று வெளியான முடிவுகளில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இன்று மிசோரம் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிறிய மாநிலமான மிசோரத்தில் மொத்தம் 40 தொகுதிகளே உள்ளன. அங்கு மெஜாரிட்டிக்கு 21 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம், மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்து ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) 18 இடங்களில் வெற்றியும் மொத்தமாக 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கடந்த முறை ஆட்சி செய்த மிசோ தேசிய முன்னணி 6 இடங்களில் வெற்றியும் 10 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. மேலும் தேசிய கட்சிகளான பாஜக 2 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றியை வெற்றியை பதிவு செய்துள்ளன. 2018ஆம் ஆண்டு 6 பிராந்திய கட்சிகளை ஒன்றிணைந்து உருவானது தான் ஜோரம் மக்கள் இயக்கம்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான லால்துஹோமம் (Lalduhoma) காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக 1984 முதல் 1989 வரை இருந்துள்ளார். பின்னர், கட்சியில் இருந்து விலகி ஜோரம் மக்கள் இயக்கத்தை உருவாக்கிய லால்துஹோமம் 2018-இல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். தற்போது மிசோரம் மாநிலத்தில் பெரும் மாற்றமாக பார்க்கப்படும் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடித்துள்ளதை அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர்.