திமுக பொதுக்குழு கூட்டம் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், தலைவர் பதவிக்கு முக.ஸ்டாலின் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திராவிட அரசியல் பேரியக்கமான திமுக 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக். 9ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற இருக்கிறது.
கட்சித்தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான தான், உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்.7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன். அண்ணா உருவாக்கிய ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில், கருணாநிதி, சுமார் அரை நூற்றாண்டு அரும்பாடுபட்டுக் கட்டிக்காத்த இயக்கம் திமுக. மாநிலக் கட்சியாக இருந்தாலும், உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், இந்தியாவில் உள்ள கட்சிகள் பலவற்றுக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருப்பது நம்முடைய இயக்கம்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய நிர்வாகிகள் எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள்.
மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். நம் தரப்பில் இருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு நாம் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.