மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய இரண்டு ஜாதிகளுக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. அந்த கலவரம் இன்னும் முடிவுக்கு வராமல் சற்று ஏறக்குறைய மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது.
அந்தக் கலவரத்தை சரி செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் ஹரியானாவில் நடந்தேறி உள்ளது. அந்த மாநிலத்தில் கலவரம் அதிகரித்து வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு, இணைய சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹரியானா மாநிலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயற்சி செய்ததில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்டனர். காவல்துறையினர் உட்பட சுமார் 70 பேர் காயமடைந்தனர். ஒரு கும்பல் அந்த ஊர்வலத்தை தாக்கியதால் 2500 க்கும் மேற்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் இருக்கின்ற நல்கர் மகாதேவ் ஆலயத்திற்குள் தஞ்சம் அடைந்தனர்.
மாலை சமயத்தில் வன்முறை அதிகரித்து, நள்ளிரவு நேரத்தில் ஒரு மசூதி தீ வைத்து எரிக்கப்பட்டது. அதோடு, நுஹ் மற்றும் அதற்கு அருகில் உள்ள நகரமான குருகிராம் வழியாக மக்கள் கூட்டம் அலைமோதியவாறு இருந்ததால், பல்வேறு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டனர்.
வன்முறை அதிகரித்ததால் சுதாரித்துக் கொண்ட அந்த மாநில காவல்துறை, வழிபாட்டு தலங்களை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியது. அமைதியை உறுதி செய்வதற்காக இரண்டு சமூகங்களின் முக்கிய உறுப்பினர்களுடன் காவல் துறையினரும் ஊர் நிர்வாகமும் கூட்டங்களை நடத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வன்முறை குறித்து காவல் துறையினர் 40 வழக்குகளை பதிவு செய்து 80க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து காணொளிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது, அதிலும் முற்றிலுமாக இணைய சேவையும் முடக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.