இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆட்டத்தின் இரண்டாவது நாளில் ஸ்டீவ் ஸ்மித்தை நோக்கி முகமது சிராஜ் பந்தை தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 86-வது ஓவரை வீசிய முகமது சிராஜ் 3வது பந்தை வீசுவதற்கு வேகமாக ஓடி வந்தார். அந்த சமயத்தில் பந்தை எதிர்கொள்வதற்கு தயாராக இருந்த ஸ்டீவ் ஸ்மித் கடைசி நொடியில் ஸ்பைடர் கேமரா நகர்ந்ததால் ஸ்டம்பை விட்டு விலகி பவுலிங்கை நிறுத்தும்படி சைகை செய்தார். ஆனால் ஓடிவந்த முகமது சிராஜ் பேட்ஸ்மேன் விலகியது தெரிந்தும்கூட பந்தை அவரை நோக்கி தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இருப்பினும் கேமரா நகர்ந்ததால்தான் நானும் நகர்ந்தேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். இந்நிலையில் முகமது சிராஜ் இவ்வாறு நடந்து கொண்டதை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் கண்டித்துள்ளனர்.முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், “என்ன நடக்கிறது? இது அன்றைய நாளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெலிவரி தான்” என்றார். அதேபோல் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்து வீசுவதற்கு முன்பு விலகிச் செல்ல ஸ்மித்துக்கு உரிமை இருப்பதாக கூறினார். அவர் கூறுகையில், “ஸ்டீவ் ஸ்மித் பின்வாங்குகிறார். சிராஜ்க்கு அது மகிழ்ச்சியை தரவில்லை. ஆனால் ஒரு பேட்ஸ்மேனுக்கு பவுலிங்கை நிறுத்தும்படி சொல்ல எல்லா உரிமையும் இருக்கிறது. சிராஜ் வீசிய முதல் 2 பந்துகளில் ஸ்மித் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த கடுப்பில் அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என நினைக்கிறேன்” என்றார்.