பருவமழைக் காலங்களில் பாம்புக் கடித்தால் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாதவை குறித்து ஈரோடு தாளவாடி வனச்சரகர் சதீஷ் விளக்கமளித்துள்ளார்.
அனைத்து வகையான பாம்புகளும் விஷப் பாம்புகள் இல்லை என்றாலும், பாம்புகளுக்குப் பயந்து பலர் ஓடுகிறார்கள். தூரத்தில் பாம்பு இருப்பது தெரிந்தாலும் உடனே அங்கிருந்து ஓட முயல்கின்றனர். இருப்பினும், மழைக்காலம் வரும்போது, பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. கிராமங்கள், புறநகர் பகுதிகள் மற்றும் கால்வாய்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பாம்பு தொல்லை அதிகமாக உள்ளது. இந்தநிலையில், தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், சாலைகளில் பெருக்கெடுக்கும் தண்ணீரில் பாம்புகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
அதாவது, உலக அளவில் பாம்பு கடியால் உயிரிழப்பவர்களில் 80% பேர் இந்தியர்கள் ஆகும். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த உயிரிழப்புகளை தடுக்க கடித்தது எந்தவகையான பாம்பு என்பதை அறிந்திருக்கவேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் 4 பாம்பு வகை கொடிய பாம்புகள் உள்ளன. பாம்பு கடிபட்ட இடத்தில் வாய் வைத்து உறிஞ்ச கூடாது என்பது உள்ளிட்டவைகள் குறித்து ஈரோடு தாளவாடி வனச்சரகர் சதீஷ் விளக்கமளித்துள்ளார்.
பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக கை மற்றும் கால்களில் அணிந்துள்ள அணிகலன்களை கழற்றிவிடவேண்டும். பாம்பு கடித்த இடத்தில் ஐஸ் போன்ற குளிர்ச்சியான பொருட்களை வைக்கக்கூடாது. பாம்பு கடிபட்ட இடத்தில் வாய் வைத்து உறிஞ்சுவதால் அவர்களுக்கும் நச்சுத்தன்மை பரவ வாய்ப்புள்ளது என்று சதீஷ் கூறினார். மேலும், வீட்டில் பாம்புகளை கண்டால் தீயணைப்புத் துறைக்கோ, தனியார் பாம்பு பிடி நிபுணர்களுக்கோ தகவல் கொடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.