“தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட உடன், மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறைக்கு கொண்டு வரப்படும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கணக்கீடு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆனால், மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்ய வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனென்றால், மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும்போது 100 யூனிட் இலவசமாக கிடைக்கும். இதனால், மின் கட்டணம் குறையும். கடந்த 2021ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் திமுகவின் 221-வது வாக்குறுதியாக ‘மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு மீண்டும் டெண்டர் கோரப்பட உள்ளது” என்று தெரிவித்தார். இதையடுத்து, ஆட்சி முடிய இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், எப்படி இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட உடன், மாதாந்திர கணக்கீடு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். அரசு கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும்படி பணிகள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, கோவை சிட்ரா பகுதியில் தொழில்நுட்ப ஜவுளி தொழில் முனைவோருக்கான 5 நாள் பயிற்சி நிகழ்வை அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”விசைத்தறி தொழில்களுக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. கைத்தறி தொழிலுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, மின் கட்டணத்தால் விசைத்தறி தொழிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விசைத்தறி தொழில் செய்பவர்களில் 70% பேர் 1000 யூனிட்டுக்குள் தான் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்” என்றார்.