துபாயில் மற்றொரு அதிசயமாக ஆடம்பர வசதிகளுடன் ‘நிலவு’ வடிவிலான ரிசார்ட் ஒன்று வடிவமைக்கப்பட உள்ளது.
உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபாவைக் கொண்டுள்ள துபாயில் மற்றொரு அதிசயமாக ஆடம்பர வசதிகளுடன் ‘நிலவு’ வடிவிலான ரிசார்ட் ஒன்றை வடிவமைக்க உள்ளனர். கனடாவின் மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் இன்க் நிறுவனத்தால் 5 பில்லியன் டாலர் மதிப்பில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் இரண்டு ஆண்டுகளில் இந்த ரிசார்ட்டை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்திற்கு ‘மூன் துபாய்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 224 மீட்டர் ( 734 அடி) உயரத்தைக் கொண்டிருக்கும். இது சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது போன்ற உணர்வைத் தூண்டும் வகையில், வடிவமைக்கப்பட இருக்கிறது. மேலும், இது ஆடம்பரமான குடியிருப்புகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன் துபாய்க்கு வருகை தரும் விருந்தினர்கள், ஸ்பா, இரவு விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அனுபவிக்க முடியும்.

இந்த ரிசார்ட் 1 கோடி பார்வையாளர்கள் வரை தங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருந்தோம்பல், பொழுதுபோக்கு, இடங்கள், கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி சுற்றுலா போன்ற துறைகளில் “மூன் துபாய்” ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் இன்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.