கடந்த அக்டோபர் 30ம் தேதி நடந்த மோர்பி பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியான சம்பவத்தில் அந்த நாளில் 3,165 டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்பனையானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்துவிழுந்தது. சாத் பூஜை மற்றும் விடுமுறையை ஒட்டி கடந்த அக்டோபர் 30ல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
திடீரென பாரம் தாங்காமல் தொங்கு பாலம் அறுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என 135 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இந்த விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மோர்பி பாலம் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. குஜராத் அரசு தனிக்குழு அமைத்து விசாரித்து வருகின்றது.
இந்நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் தடயவியல் சோதனை குறித்தமுதற்கட்ட அறிக்கையை குஜராத் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொங்கு பாலத்தின் கேபிள் கம்பிகள் மிகவும் துருப்பிடித்துள்ளது. பாலத்தை தாங்கும் கம்பிகள் அறுந்துள்ளது. பாலத்தை தாங்கும் கம்பிகள், கேபிள் கம்பிகளையும் இணைக்கும் பகுதியில் உள்ள ’’போல்ட்’’ காணவில்லை. இது மட்டும் இன்றி தொங்கு பாலத்தில் ஒரே நாளில் 3,165 பேருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
விபத்து நடைபெறும் பட்சத்தில் மக்கள் உயிரை காப்பாற்ற உயிர்காப்பாளர்கள் படகுகளை ஒரேவா நிறுவனம் வைக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.