ஆண்டுக்கு, 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்திய குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை, தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்க, ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், செப். 15-ம் தேதி திட்டம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, அடித்தட்டு மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். வசதி படைத்தவர்கள் பயனடையக் கூடாது என்பதற்காகத் தான், பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்று அரசு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த ஜூலை மாதம் இதற்கான முகாமும் தொடங்கப்பட்டது. அந்த முகாம்களில் விண்ணப்பங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு ஆகஸ்டு 4ம் தேதி முதல் கட்ட முகாம்கள் நடந்து முடிந்தன.. இதில், 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பிறகு, 2ம் கட்ட முகாம், மறுநாளே அதாவது ஆகஸ்டு 5ம் தேதி தொடங்கப்பட்டு 18ம் தேதி வரை நடைபெற்றது. இந்த 2ம் கட்ட முகாமில் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஆகஸ்டு 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிறப்பு முகாமை அரசு நடத்தியிருந்தது. இதன்மூலம் 1.63 கோடி விண்ணப்பங்களும் தமிழக அரசுக்கு வந்துள்ளன.
இந்தநிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் விண்ணப்பித்திருந்தால், ஆதார் – பான் கார்டு சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்படுகிறது. கார் பதிவு, முதியோர் ஓய்வூதியம் பெறும் விவரமும் ‘ஆதார்’ மூலம் தெரியவந்துள்ளது. மின்வாரியம் பயன்படுத்தும் மென்பொருளில் மாற்றம் செய்து, ஆண்டுக்கு, 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு மின் பகிர்மானம், கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகம் வாரியாக, மின் நுகர்வோர் கண்டறியப்பட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் மின் இணைப்பு எண் கேட்கப்பட்டுள்ளது. எனவே 2020 – 21, 2021 – 22, 2022 – 23ம் ஆண்டுகளில், தலா, 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்ட, மின் இணைப்பு எண்ணை விண்ணப்பதாரர் குறிப்பிட்டிருந்தால், விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.