விவசாயிகளுக்கு, தங்கள் வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க அதிக நேரமும் அதிக அளவில் வேலையாட்களும் தேவைப்படுகிறது. காலவிரயத்தை தவிர்க்கவும், வேலை ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் இன்றியமையாததாகிறது. அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தமிழக விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுவதுடன், அரசுத்திட்டங்கள் மூலம் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
நெல் மற்றும் சிறுதானிய அறுவடை காலங்களில், விவசாயிகள் குறைந்த தானிய இழப்பு மற்றும் குறைந்த அறுவடை செலவுடன் நெல் மற்றும் சிறு தானியங்களின் அறுவடையை காலத்தில் செய்வதற்கு நெல் அறுவடை இயந்திரம் இன்றியமையாததாகிறது.

அறுவடைக் காலங்களில், நெல் அறுவடை இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும் போது வாடகைத் தொகை உயர்ந்துவிடுகிறது. இதனால், வேளாண் வருமானம் குறைவதால் விவசாயப் பெருமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வேளாண்மைப் பொறியியல் துறைக்குச் சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்களின் மூலம் விவசாயிகளின் தேவையை ஓரளவே தீர்க்க முடியும். மேலும், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இதனால், விவசாயிகள் காலத்தே அறுவடைசெய்ய இயலாது மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள்.
இதற்கு தீர்வாக, உங்கள் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான சக்ரவகை ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரம் முலம் நெல், மக்காச்சோளம், பயறு, தானிய வகைகளை அறுவடை செய்யும் இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், விலாசம், அலைபேசி எண் போன்ற விவரங்கள் வட்டாரம் மற்றும் மாவட்ட வாரியாக, உழவன் செயலியில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள், உழவன் செயலியில் வட்டாரத்தை தேர்ந்தெடுத்து வட்டாரத்தில் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அறுவடை இயந்திர உரிமையாளர்களை தேர்வுசெய்து அவர்களை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தாங்களே வாடகை நிர்ணயம் செய்து பயனடையலாம்.