சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பகல் முழுக்க வெயில் அடித்தாலும் இரவு நேரங்களில் கனமழை பெய்கிறது. இந்த கனமழை மேலும் 5 நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு நேரத்தில் வடபழனி, திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை மழை பெய்தது. எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடாமல் பெய்ததால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் சென்னையில் இரவு முழுக்க கனமழை பெய்தும் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. அசோக் நகர், வடபழனி, அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தும் தண்ணீர் தேங்கவில்லை. பொதுவாக சென்னையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சாலைகள் வெள்ளக்காடு போல காட்சி அளிக்கும். முக்கியமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினால் தினசரி சாலைகளில் வெள்ளத்தை பார்க்க முடியும். அதிலும் டிசம்பர் மாதங்களில் சாலைகளில் ஸ்விம்மிங் அடிக்கும் நிலை ஒவ்வொரு வருடமும் ஏற்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை அப்படி தண்ணீர் தேங்கவில்லை.
இரவில் இருந்து இவ்வளவு மழை பெய்தும் சென்னையில் எங்கும் வெள்ளம் ஏற்படவில்லை. சென்னை சிட்டிக்கு உள்ளே வளசரவாக்கம், கத்திப்பாரா உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுமே தண்ணீர் தேங்கியது. தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வேகமாக தண்ணீர் வடிந்துள்ளது. ஆனால், புறநகர் பகுதிகளில் வேகமாக வெள்ளம் வடியாமல் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கு எல்லாம் இன்னும் வெள்ள நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. அங்குதான் மோட்டார் போட்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடக்கின்றன.
முன்னதாக சென்னையில் வெள்ள நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதாவது சாலைகளின் ஓரம் வெள்ள நீர் வெளியேறுவதற்காக மிகப்பெரிய அளவில் குழாய்கள் அமைக்கப்படும். ஆறுகளில் கலக்கும் வகையில் சென்னை முழுக்க இதற்காக குழாய்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வந்தனர். இது மக்களுக்கு கடுமையான இடைஞ்சல்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் மழை வெள்ளத்தை தடுக்கும் என்பதால் தொடர்ந்து பணிகள் நடந்தன.
பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளன. இதனால் கடந்த வருடம் சென்னையில் வெள்ளம் ஏற்படவில்லை. அதேபோல் இந்த வருடமும் சென்னை மழைக்கு இடையே பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.