மனிதர்கள் பயன்படுத்தும் சோப்பின் வாசனையால் கூட கொசுக்கள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு மனிதர்களுக்கு தொல்லை தரலாம் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
iScience இதழில் வெளியிடப்பட்ட Virginia Tech (USA) ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, குறிப்பிட்ட வாசனையுடைய சோப்புக்களை குறிப்பிட்ட உடல் நறுமணம் கொண்ட நபர்கள் பயன்படுத்தும் போது கொசுக்களால் அதிகளவில் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் மனிதர்களின் இயற்கையான உடல் துர்நாற்றத்தால் மட்டும் ஈர்க்கப்படுவதில்லை என்றும், நமது உள்ளார்ந்த வாசனையைத் தவிர தொல்லை தரும் கொசுக்கள் நாம் பயன்படுத்தும் சோப்புகளில் உள்ள வாசனைகளையும் முகர்ந்து நம்மை நோக்கி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
இதுகுறித்து இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகித்த வர்ஜீனியா டெக் உயிர் வேதியியலாளரும் மரபியல் நிபுணருமான கிளெமென்ட் வினாஜர் கூறுகையில், “பெரும்பாலான சோப்புகள் பூக்கள், பழங்கள் மற்றும் தாவரங்களின் இனிமையான வாசனையுடன் கலந்து உருவாக்கப்படுகிறது. இந்த வாசனை திரவியங்கள் சோப்பாக நாம் பயன்படுத்தும் போது நமக்கு நல்ல வாசனையை உண்டாக்கினாலும், கொசுக்கள் இந்த வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி சர்க்கரையைப் பெறுகின்றன.
கொசுக்கள் ரத்தத்தை தவிர தாவரங்களில் உள்ள அமில தாதுக்களையும் தன்னுடைய தேவைகளுக்காக பயன்படுத்துவதால் இத்தகைய வாசனை திரவியங்களால் ஈர்க்கப்பட்டு நம்மை நோக்கி வருகின்றன. இதற்காக நன்கு அறியப்பட்ட 4 வெவ்வேறு பிராண்டு சோப்புகளை, வெவ்வேறு தன்னார்வலர்களிடம் கொடுத்து பயன்படுத்த சொல்லி சில நாட்களுக்கு பிறகு அவர்களை ஆய்வு செய்தபோது பழம் மற்றும் சிட்ரஸ் வாசனையுள்ள சோப்புகள் கொசுக்களை அதிகளவு ஈர்ப்பதையும், தேங்காய் வாசனை கொண்ட நேட்டிவ் பிராண்ட் சோப்புகள் கொசுக்களை விரட்டுவதையும் நம்மால் காண முடிந்தது.
இதனால் தொல்லை தரும் கொசுக்களிடம் இருந்து நாம் தப்பிக்க விரும்பினால், சிட்ரஸ் மற்றும் பழங்களை விட தேங்காய் வாசனையுள்ள சோப்பு பார்களைத் தேர்வு செய்து நாம் பயன்படுத்திடுவதே நலம் என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இருப்பினும் மனித உடலிலிருந்து வெளிப்படும் துர்நாற்றம் கலந்த நறுமணம் ஒவ்வொருவரிடத்திலும் வெவ்வேறாக வெளிப்படுவதால் நாம் பயன்படுத்தும் சோப்பை தாண்டியும் கொசுக்களின் செயல்பாடு வேறுபடலாம்” என்று கூறினார்.
Read More : மருத்துவர் பரிந்துரையின்றி இந்த மருந்து, மாத்திரைகளை தொடவே தொடாதீங்க..!! உயிருக்கே ஆபத்தாகிவிடும்..!!