வெளிநாட்டுப் பொருள்களின் மீதான மோகம் மக்களிடம் இன்னமும் குறைந்த பாடில்லை. சென்ட், டிரஸ், தலைவலி தைலம், நகைகள் என அனைத்துப் பொருள்களும் இங்கு கிடைத்தாலும் நான் வெளிநாட்டிலிருந்து வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லும் போதே ஒருவித பெருமை தான் அனைவருக்கும். அதிலும் முதலீடுகளைத் தங்கத்தில் போடுபவர்கள் துபாய் தங்கத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். “ தூய்மை, தரம், மலிவான விலை என பல்வேறு சலுகைகள் கிடைப்பதால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு மற்றும் தங்களுடைய உறவினர்களுக்கு இந்தியா வரும் போதெல்லாம் வாங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், வரி குறைப்பால் துபாய் சென்று தங்கம் வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று இந்திய நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். துபாயில் பெரிய அளவிலான தங்க நகை வர்த்தகம் செய்யும் ஜாய் அலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுகாஸ் கூறுகையில், “இந்த வரி குறைப்பு காரணமாக, துபாயில் எங்கள் வணிகத்தில் கிட்டத்தட்ட 50% இந்தியாவுக்கு மாறும், ஏனெனில் தங்கம் வாங்க துபாய் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இப்போது இந்தியாவில் தங்கத்தை ஷாப்பிங் செய்வார்கள்” என்று கூறினார். இதேவேளையில் துபாயில் வசிக்கும் என்ஆர்ஐ-கள் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து தங்கம் வாங்குவது தொடரும் கூறியுள்ளார்.
மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதிக்குச் சுங்க வரியை 6% ஆகக் குறைத்துள்ளது, இதேவேளையில் துபாயில் தங்கம் வாங்குவதற்கான 5% மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) உள்ளது. இதனால் வெறும் 1 சதவீத வரி வித்தியாசம் இருக்கும் காரணத்தால் துபாயில் இருக்கும் பெரும்பாலான ரீடைல் தங்க நகை வர்த்தகம் இனி இந்தியாவுக்கே திரும்ப உள்ளது.
இதேபோல் துபாயில் உள்ள என்ஆர்ஐகளுக்கு VAT திரும்ப கிடைக்காது. வெளிநாடு சென்று தங்கம் வாங்கும் இந்தியர்களுக்குத் தான் தங்க நகை வாங்கியவர்கள் செலுத்திய VAT வரியில் சுமார் 60% திரும்ப கிடைக்கும். இதனால் இந்தியாவிற்குப் பதிலாகத் துபாயில் தங்கம் வாங்குவதில் லாப அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் துபாய்-க்கு பதிலாக சென்னையிலேயே தங்கம் வாங்கலாம் என்ற நிலைக்கு மக்கள் மாறுவார்கள்.
Read more ; ஐடிஆர் தாக்கல் 2024 : ரூ.10 லட்சம் வருமானத்தில் வரிவிலக்கு பெறுவது எப்படி? முழு விவரம்