கொரோனா வைரஸுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த தாய், மகள் ஆகியோர் மீட்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் குய்யேரு கிராமத்தைச் சேர்ந்தவர் கர்நீதி கே. சூரியபாபு. இவரின் மனைவி கே. மணி (44). இவரது மகள் துர்கா பவானி (20). கொரோனா காலத்தில் ஏற்பட்ட பயம் காரணமாகவும், தங்களை யாரேனும் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தாலும், தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கதவைப் பூட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளனர். எந்த ஒரு விஷயத்துக்காகவும் அவர்கள் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

மணியின் கணவர் கே. சூரியபாபு, வெளியே சென்று உணவுப் பொருட்களை வாங்கி வந்து தருவார். இந்நிலையில், இருவரின் உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்ததால், மணியின் கணவர் கே. சூரியபாபு உள்ளூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள், போலீஸாரின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து, காவல்துறையும், சுகாதாரத்துறை ஊழியர்களும், மணியையும், அவரின் மகள் பவானியையும் மீட்பதற்காக அவர்களது வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும், உறவினர்கள் தங்களை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பி இருப்பதாக கூறி கதவை திறக்க மறுத்துள்ளனர். இதையடுத்து, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அதிகாரிகள் இருவரையும் மீட்டு வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்று காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

மணியும், அவரின் மகள் பவானியும் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே போர்வையில்தான் படுத்து தூங்கியுள்ளனர். இதுகுறித்து மணியின் கணவர் சூரியபாபு கூறுகையில், ”என் மனைவியும், மகளும் எப்போதாவதுதான் வீட்டைவிட்டு வெளியே வருவார்கள். நான் உணவு சமைத்து இருவருக்கும் ஜன்னல் வழியாக வழங்குவேன். நான்தான் வெளியே சென்று உணவுக்கான பொருட்களை வாங்கி வருவேன். கடந்த சில மாதங்களாக என்னை ஜன்னல் வழியாக உணவு வழங்கவும் இருவரும் அனு மதிக்கவில்லை. இதனால் வேறு வீட்டில் நான் தங்கிக் கொண்டு அங்கு சமையல் செய்து உணவை எடுத்து வந்து கதவின் அருகே வைத்துவிடுவேன். சமீபகாலமாக இருவரின் உடல் நிலையும் மோசமடைந்து வந்தது, இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமல், மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே, போலீஸாரையும், அதிகாரிகளையும் நாடினேன். தற்போது மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று கூறினார்.