சென்னை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியைச் சேர்ந்தவர் மீனாட்சி (27). இவர், சரவணன் (34) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஜெயகாந்த் என்ற மகன் இருந்தார். இந்நிலையில், கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவரை பிரிந்து வாழ மீனாட்சி முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டு கிருஷ்ணகிரியில் இருந்து தனது 6 வயது மகனுடன், சென்னை கரையான்சாவடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு தாயுடன் வசிக்கும் போது, தனது சொந்த மகனே பாரமாக இருப்பதாக மீனாட்சி எண்ணியுள்ளார். மேலும், மறுமணம் செய்ய தடையாகவும் இருந்ததாக நினைத்துள்ளார். இதனால், தனது மகனை கொலை செய்ய மீனாட்சி திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று தனது மகனை அடித்து மயக்கமடைய செய்து, முகத்தில் தலையணையால் அழுத்திக் கொலை செய்துள்ளார். பின்னர், சிறுவனின் உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். ஆனால், மீனாட்சி எதிர்பார்த்தபடி உடல் உடனே எரிந்து முடிக்கவில்லை.
இதையடுத்து, அந்த உடலை வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்க் கால்வாயில் வீசியுள்ளார். பிறகு ஒன்றுமே தெரியாதது போல் இருந்துள்ளார். இதையடுத்து, 2 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், சந்தேமடைந்த அக்கம்பத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் மீனாட்சியின் மகன் திடீரென மாயமானது தெரிந்தது. இதையடுத்து, மீனாட்சியிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.
அப்போது, தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், குற்றமும் நிரூபிக்கப்பட்டதால், மீனாட்சிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும், அபராதம் கட்ட தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என எச்சரித்தார். இதையடுத்து, அவர் போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.