தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாமல் இருந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த தேக்க நிலையை சரி செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்தியது. கடந்த 11.04.2022 அன்று 10 அழைப்பு மையங்களைத் திறக்கப்பட்டது. அண்ணாநகர் TROZ மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டறை ANPR கேமரா மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டது.
கடந்த 6 மாதங்களில் சாலை விதிமீறல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட வாகன விதிமீறல்கள் தொடர்பாக பழைய, புதிய வழக்குகள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 18 ஆயிரத்து 573 வழக்குகளில், 23 கோடியே 25 லட்சத்து 10 ஆயிரத்து 581 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்த சென்னை போக்குவரத்துக் காவல் துறை சார்பில் குறுஞ்செய்தி அமைப்பு மற்றும் கட்டண வசதியை எளிமை படுத்துவதற்காக QR Code முறை ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளதால் அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்திற்கு எதிராக எதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்து, அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.