சட்ட விரோத கடன் வழங்கும் செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
“சட்டவிரோத கடன் செயலிகள்” தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் நிதிப்பிரிவு செயலாளர் பொருளாதார விவகாரங்கள் பிரிவு செயலாளர், இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நலிந்த பிரிவு மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு அதிக வட்டி விகிதங்கள், செயல்முறை கட்டணங்கள் இல்லாமல் கடன்கள் மற்றும் நுண் கடன்கள் வழங்குவதாக சட்டவிரோத கடன் செயலிகள் பற்றிய தகவல்கள், மிரட்டுதல் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறுதல் போன்ற சம்பவங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் கவலை தெரிவித்தார்.
இதன் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குதல், வரிஏய்ப்பு, தனிநபர் தரவுப்பாதுகாப்பை மீறுதல், ஒழுங்குப்படுத்தப்படாமல் பணம் செலுத்து முறையை தவறாக பயன்படுத்துதல். போலி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடின்மை போன்றவற்றுக்கான சாத்தியக் கூறுகளையும் சீதாராமன் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சனையின் சட்ட ரீதியான, நடைமுறை ரீதியான, தொழில்நுட்ப ரீதியான, அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்தப் பின் முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
அதன் படி, அனைத்து சட்டப்பூர்வமான செயலிகளின் “வெள்ளை அறிக்கை”யை ஆர்பிஐ தயாரிக்கும். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள செயலிகளை மட்டும் ஆப் ஸ்டோர்கள் வழங்குவதை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உறுதி செய்யும். கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன்படுத்தும் போலிக் கணக்குகளை ஆர்பிஐ கண்காணிக்கும் செயல்படாத வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க அது ஆய்வு செய்யும் அல்லது ரத்து செய்யும்.