தடுப்பூசிபோட்டு மகள் உயிரிழந்த வழக்கில் பதில் கேட்டு பில்கேட்ஸ்க்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மும்பை அவுரங்காபாத்தில் வசித்து வருபவர் திலீப் லூனாவத். இவரது மகள் சினேகல் லூனாவத் , இவர் நாசிக்கில் உள்ள கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் படித்த கல்லூரியில் கட்டாயப்படுத்தி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இவர் மருத்துவர்மற்றும் மூத்த பேராசிரியராவர். சுகாதாரப் பணியாளர் என்ற வகையில் இந்த தடுப்பூசி போடப்பட்டதாக தெரிகின்றது.
இவருக்கு அளிக்கப்பட்ட இந்த கோவிஷீல்டு எஸ்.ஐ.ஐ. உருவாக்கியுள்ளது. சில நாட்களுக்குப் பின்னர் இவருக்கு கடுமையான தலைவலி , வாந்தி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது இவரின் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. சிகிச்சை பெற்று வந்த சினேகல் கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதற்கு காரணம் சினேகல் செலுத்திக் கொண்ட கோவிஷீல்டு ஊசியின் பக்கவிளைவே என அவரது தந்தை மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.
இதையடுத்து மும்பை நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்தார் . விசாரணை நடத்திய மும்பை உயர்நீதிமன்றம் சீரம் நிறுவனம் , மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் பில்கேட்சுக்கு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இழப்பீடாக ரூ.1000 கோடி அளிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பில் அன்ட் மெலிண்டா கேட் நிறுவனம் – எஸ். ஐ. ஐ. உடன் இணைந்து 100 மில்லியன் தடுப்பூசிகள் தயாரித்து வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து திலீப் லுனாவத் கூறுகையில் , ’’கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் பலர் உயிரிழந்துள்ளனர் . அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டது போன்றுதான். எனது மகளுக்கு தக்க நீதி கிடைக்கவே கோர்ட்டை நாடி உள்ளேன்’’ என்றார்.