கோவை கார் வெடிப்பு சம்பவ வழக்கில் முபின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட்டை உள்ளிட்ட பொருட்களை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்களில் வாங்கியது தெரியவந்துள்ளது.
கடந்த 23ஆம் தேதி அன்று அதிகாலையில் கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பாக திடீரென்று கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த வாலிபர் பலியானார். போலீசாரின் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முபின் (29) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது அசாருதீன், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை இரவோடு இரவாக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த அப்சர் கான், இறந்துபோன முபினின் உறவினர் என போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்திய போலீசார் முபின் வீட்டில் இருந்து 76.5 கிலோ ரசாயன பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் வீட்டில் இருந்தது. இந்த பொருட்களை ஆய்விற்காக தடயவியல் குழுவினர் எடுத்துச் சென்றுள்ளனர். முடிவு வந்ததும் இந்த ரசாயனப் பொருட்கள் எத்தகைய வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுகிறது என்பது குறித்து தெரியவரும் என்று கூறியுள்ளார்.
மேலும் , வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் எப்படி கிடைத்தது? என்பது தொடர்பாகவும் அப்சர்கானிடம் விசாரணை நடந்து வருகின்றது. ஒரு சில பொருட்களை அவர் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் மூலம் பர்ச்சேஸ் செய்து இருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.