நொய்டாவில் இருக்கும், ஒரு ஹோட்டல் அறையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று, 26 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் எம்என்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர், இது தற்கொலையாக இருக்கலாம் என கூறினர். இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். அதை தொடர்ந்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த கொலை தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் உடன் வேலை செய்யும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர், காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்தப் பெண் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, திங்கள்கிழமை காலையில் அவரது நண்பருக்கு அவசர உதவி கேட்கும் எஸ் ஓ எஸ் மூலமாக, வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார் என்று கூறுகின்றனர். மேலும் அந்த வீடியோவில் நொய்டாவில் இருக்கும், ஒரு காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வரும் ஒருவர், தன்னை துன்புறுத்தி வருவதாகவும் தயவுசெய்து எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று, அந்தப் பெண் கதறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து வீடியோவை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்தப் பெண் கூறும் கம்ப்யூட்டர் ஆபரேட்டரை தேடி வருகின்றனர்.
பெண்ணின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனைத்து விதமான கோணங்களிலும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் மூச்சு திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமா புக் செய்து ஹோட்டலுக்கு அந்த பெண் வந்துள்ளார் என்றும், ஹோட்டலுக்கு அந்த பெண் தனியாக வந்துள்ளதும், சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக, காவல்துறையினர் கூறுகின்றனர்.