கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான முருகேசனுக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்தனர்.
சிறிது நாட்களுக்குப் பிறகு கள்ளக்குறிச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டில் மனைவி கண்ணகியை தங்க வைத்துள்ளார் முருகேசன். இதற்கிடையே, கண்ணகியைக் காணாவில்லை என அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து, தொடர்ந்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை அடித்து உதைத்து கண்ணகியையும், முருகேசனையும் கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி குப்பநத்தம் கிராமத்துக்கு அழைத்து வந்தனர்.
அன்றைய தினமே இருவரையும் மயானத்திற்கு அருகில் அழைத்துச் சென்று எழுத்தில் விவரிக்க முடியாத சித்திரவதைக்குப் பிறகு, முருகேசன், கண்ணகி ஆகியோரின் மூக்கு மற்றும் காதுகளில் விஷம் ஊற்றப்பட்டது. வாயைத் திறக்க மறுத்ததால் இருவரின் காது, மூக்கில் விஷத்தை ஊற்ற, இருவரும் அலறித் துடித்தனர். ஊரே இதை வேடிக்கை பார்க்க, இருவரும் துடிதுடிக்க இறந்தனர். பின்னர், இருவரின் உடல்களையும் அவர்களின் குடும்பத்தினர் எடுத்துச் சென்று தனித்தனியாக எரித்தனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவேறு சாதியைச் சேர்ந்த கண்ணகியும், முருகேசனும், கடந்த 2003 மே 5ஆம் தேதி காதல் திருணம் செய்து கொண்டதால், ஆணவக்கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொடூர சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருதாச்சலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அது தற்கொலை எனக்கூறி அந்தப் புகாரை ஏற்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். அதற்கடுத்த சில நாள்களில், ஊடகங்களில் ஆணவப் படுகொலை என செய்தி வெளியானது. பின்னர் 18 நாள்கள் கழித்து விஏஓவிடம் புகாரை வாங்கி, முருகேசன் தரப்பில் 4 பேர் மீதும், கண்ணகி தரப்பில் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 2004ஆம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவில், கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரின் அண்ணன், விருதாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ. தமிழ்மாறன் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என்றும், இதில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது. இதற்கிடையே, மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவர்களுக்கான தண்டனையை உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆணவக் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.