கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த ரகுபதியும் (வயது 35), பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்யா (32) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமித் (10), தஷ்வந்த் (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். என்ஜினியரிங் முடித்த ரகுபதி, வெளிநாட்டில் நீண்ட வருடங்களாக வேலை பார்த்து வந்தார். சத்யா தனது கிராமத்திலேயே வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ரகுபதி, கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு வந்துள்ளார். திடீரென குடிப்பழக்கத்திற்கு ஆளான ரகுபதி, குடித்துவிட்டு அடிக்கடி மனைவி சத்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் தனது பெற்றோரிடம் சத்யா குமுறி உள்ளார். இதனால் ரகுபதியை சத்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, ரகுபதி மது அருந்திவிட்டு முழு போதையில் சத்யாவிடம் கடுமையான தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி பக்கத்து வீட்டில் வசித்த அவரது மாமனார் செல்வராஜ், தனது மனைவி சுசீலாவுடன் அங்கு வந்து தட்டிக்கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த ரகுபதி, குடிபோதையில் அருகில் இருந்த செங்கல்லால் சுசீலாவை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்து கடும் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், அருகில் இருந்த கட்டையால் ரகுபதியை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ரகுபதி சம்பவ இடத்திலேயே துடிக்க துடிக்க உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து அக்கம்பக்கத்தினர் ஆவினங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், திட்டக்குடி டிஎஸ்பி காவியா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், ரகுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் காயமடைந்த சுசீலாவை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த கொலை குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.