உத்தரப் பிரதேச மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று முக்தார் அன்சாரி வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மரணமடைந்தார். 60வயதான தாதா முக்தார் அன்சாரி கடந்த மார்ச் 23ஆம் தேதி கூட வயிற்று வலியால் 14 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு முதல் உ.பி. மற்றும் பஞ்சாபில் சிறையில் இருந்தார். அவர் மீது 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி மௌ சதார் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை எம்எல்ஏ வாக வெற்றி பெற்றவர். இறுதியில் 2017-2022 வரை எம்எல்ஏவாக இருந்தார். செப்டம்பர் 2022 முதல் உ.பி.யின் வெவ்வேறு நீதிமன்றங்களால், எட்டு வழக்குகளில் அன்சாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டு பண்டா சிறையில் அடைக்கப்பட்டார். உத்தரப் பிரதேச காவல்துறை 2023ஆம் ஆண்டு வெளியிட்ட 66 குண்டர்கள் பட்டியலில் முக்தார் அன்சாரி பெயர் இருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த முக்தர் அன்சாரியின் மகன் உமர் அன்சாரி, சிறையில் தனது தந்தைக்கு உணவில் விஷம் கொடுக்கப்பட்டதாகவும், குடும்பம் நீதிமன்றத்தை நாடுவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “தனது தந்தை முக்தர் அன்சாரி இறப்பு குறித்து சிறை நிர்வாகம் தரப்பில் எனக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை, ஊடகங்கள் மூலம் தான் எனது தந்தை இறப்பு குறித்து தெரிந்து கொண்டேன்.. ஆனால், இப்போது தேசம் முழுவதும் எல்லாம் தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு அவரைச் சந்திக்க சென்றபோது என்னை அனுமதிக்கவில்லை.
நான் முபே சொன்னதைப்போல அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதை திரும்பவும் கூறுகிறேன். மார்ச் 19 அன்று, அவரது இரவு உணவில் விஷம் கலந்துவிட்டிருக்கின்றனர். இதை நாங்கள் நீதித்துறையிடம் செல்வோம், அதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்ததும், நாங்கள் அடுத்த செயல்முறையை (தகனம்) பின்பற்றுவோம்” என்று கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, முக்தார் அன்சாரியின் சகோதரரும், காஜிபூர் எம்.பி.யுமான அப்சல் அன்சாரி, “சிறையில் இருந்தபோது அதிகாரிகள் அவருக்கு “ஸ்லோ பாய்சன் கொடுத்ததாக” குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டது.
முக்தார் அன்சாரியின் மரணத்துக்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அகில இந்திய மஜிலிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைசி முக்தார் அன்சாரியின் குடும்பத்திற்கு ஆதரவாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் மற்றும் அன்சாரியின் சகோதரர் கூறிய குற்றச்சாட்டுகளையும் முன்னிலைப்படுத்தினார்.
இது குறித்து அவரது பதிவில் “முக்தார் அன்சாரியை மன்னிக்கவும், அவரது குடும்பத்தினருக்கும் அவரது அன்புக்குரியவர்களுக்கும் பொறுமையைக் கொடுக்கவும், நான் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். காஜிபூர் மக்கள் தங்கள் விருப்பமான மகனையும் சகோதரனையும் இழந்தனர். முக்தாரின் சகோதரர், விஷம் கொடுத்ததாக நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவரது சிகிச்சையில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. இது கண்டனத்துக்குரியது மற்றும் வருந்தத்தக்கது” என்று ஒவைசி பதிவிட்டிருந்தார்.
ராஷ்டிரிய ஜனதா கட்சியின் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ், அனஸ்ரியின் மரணம் குறித்து கவலைகளை எழுப்பினார், மேலும் இதுபோன்ற விசித்திரமான வழக்குகளை தானாக முன்வந்து விசாரிக்க அரசியலமைப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது குறித்து அவரது பதிவில் “உ.பி.யின் முன்னாள் எம்எல்ஏ திரு முக்தார் அன்சாரியின் மறைவு குறித்து வருத்தமான செய்தி கிடைத்தது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம், பிரிந்து இருக்கும் குடும்பத்தினருக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை அளிக்க வேண்டும். சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தும், அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற விசித்திரமான வழக்குகள் மற்றும் சம்பவங்களை அரசியலமைப்பு நிறுவனங்கள் தாமாக முன்வந்து அறிந்து கொள்ள வேண்டும்,” என்று யாதவ் கூறினார்.