நடிகர் ரஜினியின் ‘எந்திரன்’ திரைப்படம் கதை திருட்டு வழக்கில் பிரபல இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கிய நிலையில், இது அதிகார துஷ்பிரயோகம் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்திரன் திரைப்படம் தொடர்பான அடிப்படையற்ற திருட்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சென்னை அமலாக்கத்துறை சமீபத்தில் எடுத்த நடவடிக்கையை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதில், என்னுடைய 3 அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளனர். இன்று வரை பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகத்திடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. சமூக வலைதளங்களில் மட்டுமே தகவல் பரவி வருகிறது.
இந்த நடவடிக்கை சட்ட உண்மைகளை தவறாகப் புரிந்துகொள்வது மட்டுமின்றி, சட்ட செயல்முறையின் தெளிவான மற்றும் தவறான பயன்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் சிவில் வழக்கு எண். 914/2010 இல் முழுமையாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரின் ஆதாரங்களையும், வாதங்களையும் நீதிமன்றம் கவனமாக ஆராய்ந்து, எந்திரன் கதையின் பதிப்புரிமைதாரர் என்று தன்னை அறிவிக்கக் கோரி ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த கோரிக்கையை நிராகரித்தது என்று ஷங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தெளிவான நீதித்துறை தீர்மானம் இருந்தபோதிலும், அமலாக்கக்கத்துறை, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் ஈடுபட்டுள்ளது. அமலாக்கத்துறை இயக்குநரகம் குறிப்பிட்ட புகாரை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் மூலம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, பதிப்புரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை என்று சிவில் நீதிமன்றத்தின் தெளிவான சட்டத் தீர்ப்பு இருந்தபோதிலும், அமலாக்கத்துறையின் தொடர் நடவடிக்கையால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இந்த அத்துமீறல் சட்ட செயல்முறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தைக் குறிக்கிறது.
அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து இந்த விஷயத்தில் மேலும் நடவடிக்கைகளை நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், பறிமுதல் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ’சிகிச்சைக்கு பணம் இல்லை’..!! நிதியுதவிக்காக மன்றாடிய பாண்டியராஜன் பட இயக்குனர் எஸ்.உமேஷ் காலமானார்..!!