சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தற்பொழுது நாட்டிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகவும் சவாலான நேரம். இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஒரு சில தொழிலதிபர்களுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்து வருகிறது.
கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான திறமையான அரசு பெற்ற வெற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளிக்கிறது. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது அரசியல் வாழ்க்கை முடிகிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இந்திய மக்கள் நல்லிணக்கம் சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தை விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது” என பேசினார்.