மியான்மர் ஆளும் இராணுவம் நாட்டின் உள்நாட்டுப் போரை தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, கடந்த 28ம் தேதி, 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இதுவரை, மியான்மரில் 3000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், மேலும் 4,639 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியும் இடர்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மியான்மர் ஆளும் இராணுவம் நாட்டின் உள்நாட்டுப் போரை தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. மியான்மரில் 4 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, கடந்த 2020-ல் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் போர் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு மிகவும் மோசமானதால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், மியான்மரில் ஆளும் ராணுவ அரசு மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் குழுக்களுக்கு எதிராக தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
Read more: 47 வயதில் தந்தையான ரெடின் கிங்ஸ்லி.. நெகிழ்ச்சியாக போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து..!!