மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மியான்மர் முழுவதும் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தொடர்கின்றன, இன்று வரை, 2700 க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவி இயற்பியலாளர் விக்டர் சாய் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் வெற்றிடத்தின் கீழ் சிக்கி கொண்டால் உயிர்வாழும் நாட்கள் அதிகரிக்கும். பெரும்பாலான மீட்புப் பணிகள் பேரழிவு நடந்த 24 மணி நேரத்திற்குள் தொடங்கும். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் உயிர்வாழும் வாய்ப்புகள் குறைகின்றன என்றார்.
வானிலை, நீர் மற்றும் காற்று அணுகல் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து உயிர்வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளன. காயங்கள் மிகவும் கடுமையாக இல்லாவிட்டால், வானிலை மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் உயிர்வாழ முடியும். கட்டிடம் இடிந்து விழுந்ததன் விளைவாக தீ, புகை அல்லது ஆபத்தான இரசாயனங்கள் வெளியிடப்பட்டிருந்தால், அவை ஒரு நபரின் உயிர்வாழும் வாய்ப்புகளைக் குறைக்கக்கூடும்.
அதையும் தாண்டி, நாட்கள் செல்லச் செல்ல சுவாசிக்க காற்றும் குடிக்க தண்ணீரும் இருப்பது மிக முக்கியம். உணவு இல்லாமல் நீங்கள் சிறிது காலம் உயிர்வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழும் சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்று புவி இயற்பியலாளர் விக்டர் சாய் கூறினார். மின் தடைகள் மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் நிவாரணப் பணிகளை மெதுவாக்கியுள்ளன. கனரக இயந்திரங்கள் இல்லாததால் தேடல் மற்றும் மீட்பு பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது.