மியான்மரில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை உச்சக்கட்ட எமர்ஜென்சி நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, கடந்த 28ஆம் தேதி 7.7 என்ற ரிக்டர் அளவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பின்னர், அடுத்த 12 நிமிடங்களில் 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நய்பிடா விமான நிலையத்தில் தகவல் தொடர்பு கோபுரம் இடிந்து விழுந்ததால், விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், யாங்கூன் நகருக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இடிபாடுகளை தோண்டத் தோண்ட உடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.
மியன்மாரில் இதுவரை சுமார் 2,000-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 300 பேர் காணாமல் போயுள்ளனர். முதற்கட்ட சேதங்களை வைத்துப் பார்க்கும்போது பலி எண்ணிக்கை 10,000ஐ தாண்டக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான், உலக சுகாதார அமைப்பு மியான்மர் நிலநடுக்கத்தை உயர்மட்ட அவசரநிலையாக அறிவித்துள்ளது.
மேலும், அங்கு அடுத்த 30 நாட்களுக்கு உயிர்களைக் காப்பாற்றவும் நோய் பரவலைத் தடுக்கவும் 8 மில்லியன் டாலர்கள் தேவை என்று கூறியுள்ளது. மியான்மரில் நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் காயமடைந்தோருக்கு உரிய அறுவை சிகிச்சை வழங்க முடியவில்லை. இதனால், பல ஆயிரம் பேர் நோய்த் தொற்று ஆபத்தில் உள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
Read More : ’போதுமடா சாமி’..!! ’சர்வரே திணறுது’..!! ’புகையா வருது’..!! Ghibli ஃபோட்டோவால் கதறும் சாட்ஜிபிடி ஓனர்..!!