மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் நாட்டை கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு மக்கள் வதைக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஏராளமான இந்தியர்களும் வதைக்கப்படுவதாக மியான்மரில் வசிக்கும் இந்தியர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் கூறுகையில் , ’’இந்தியர்களை மீட்க மத்திய அரசிடம் நான் கோரிக்கை வைப்பேன். இந்தியாவிற்கு வரவழைப்பதற்கோ அல்லது அங்கேயே பாதுகாப்பாக இருப்பதற்கோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ’’ என்றார்.
மியான்மரில் மியாவாடி பகுதியில் தமிழர்கள் உள்பட 60 பேர் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுவரை 60 பேர் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதாக தவறுதலாக மியான்மரில் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தி உண்மையில் எவ்வளவு பேர் உள்ளார்கள் என கண்டறிந்து அவர்களை மீட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.