தனியார் பள்ளியில் நள்ளிரவில் நடந்த பூஜை தொடர்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு நெடுமண்ணூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் இரவு பள்ளி மேலாளரின் மகன் ருதீஷின் தலைமையில், பாஜகவினர் முன்னிலையில் கணபதி ஹோமம் வளர்த்து பூஜைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களும், பொதுமக்களும் இதனைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பள்ளியில் நடந்த பூஜை குறித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பள்ளியில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பூஜை குறித்து விசாரணை நடத்தப்படும். அதோடு, விசாரணை நடத்தி விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.