நாட்டில் சமீபகாலமாக பெண்களை பலாத்காரம் செய்து அவர்களை கொலை செய்யும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது. பெங்களூருவில் அடுத்தடுத்து இரண்டு மூன்று கொலைச் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், அந்த உடல்களை சூட்கேஸுக்குள் அடைத்து தூக்கிச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ராவின் மாவட்டம், துர்ஷெட் கிராமத்தில் சாலையோரத்தில் ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அந்த மர்ம சூட்கேஸை திறந்து பார்த்தனர். அதில், அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அந்த சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போளீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் உடலை வைத்து அடையாளம் காண முயற்சித்து வருவதாகவும், அந்த பெண் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.