“மர்ம வைரஸ்” என்று அழைக்கப்படும் HMPV வைரஸ் பாதிப்புகள் திடீரென அதிகரித்து வருவதால், இங்கிலாந்தில் சுகாதார அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். குறிப்பாக வயதானவர்களிடையே, தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) சமீபத்தில் அறிவித்தது..
அதிகரித்து வரும் பாதிப்பு
இங்கிலாந்தில் HMPV சோதனை நடத்தப்பட்டவர்களில் 4.9 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் தொற்று விகிதம் 7.3 சதவீதமாக அதிகரிப்பதாகவும் சமீபத்திய தரவு காட்டுகிறது. 7,800 க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இது வைரஸ் பரவலை அதிகரித்து வருவதை காட்டுகிறது.
இந்த அதிகரிப்பு, HMPV போன்ற சுவாச நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த, மாஸ்க் அணிவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்கான அழைப்புகளை சுகாதார அதிகாரிகள் மீண்டும் கொண்டுவர வழிவகுத்தது.
காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களால் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் தேசிய சுகாதார சேவைக்கு இந்த HMPV பரவல் அதிகரிப்பு கூடுதல் சவலாக மாறி உள்ளது. NHS இங்கிலாந்தின் தலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார்ட் நிலைமை குறித்து கவலை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் “எங்கள் முன்னணி ஊழியர்கள் மிகுந்த அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். ஃப்ளூ மற்றும் பிற வைரஸ்கள் நோயாளிகளையும் சுகாதார சேவைகளையும் பாதிக்கின்றன,” என்று அவர் கூறினார்.
HMPVன் அறிகுறிகள் என்னென்ன?
மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்று அழைக்கப்படும் HMPV வைரஸ் பொதுவாக லேசானது முதல் கடுமையானது வரை சுவாச அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
மூக்கில் நீர் வடிதல் அல்லது அடைப்பு
இருமல்
காய்ச்சல்
தொண்டை வலி
சுவாசிப்பதில் சிரமம்
மூச்சுத் திணறல்
பெரும்பாலான மக்கள் சில நாட்களுக்குள் குணமடைந்தாலும், இந்த வைரஸ் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும், குறிப்பாக வயதானவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியா ஆபத்தில் உள்ளதா?
இந்தியாவின் இந்த HMPV வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனித மெட்டாப்நியூமோவைரஸ் 2001 முதல் உலகளவில் அறியப்படுகிறது. பொதுவாக லேசான, சுயமாக கட்டுப்படுத்தும் தொற்றுகளை ஏற்படுத்துகிறது.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் சமீபத்தில், இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்தாலும் அதை கையாள நாடு தயாராக உள்ளது என்று கூறினார். ”குளிர்கால மாதங்களில் சுவாச நோய்கள் அதிகரிக்கும் அதே வேளையில், நிலைமையை நிர்வகிக்க நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகாட்டுதல்கள்
HMPV மற்றும் பிற சுவாச நோய்களின் பரவலைக் குறைக்க உதவும் தடுப்பு வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது:
சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்.
உங்கள் முகத்தை, குறிப்பாக மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
நெரிசலான அல்லது காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் மாஸ்க் அணியுங்கள்.
சுவாச நோய்களின் அறிகுறிகளைக் காட்டும் நபர்களிடமிருந்து தூரத்தை பராமரிக்கவும்.
நீங்கள் வசிக்கும் இடத்தை சுத்தமாகவும் நன்கு காற்றோட்டமாகவும் வைத்திருங்கள்.
Read More : மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் கண்டிப்பா இவ்வளவு நேரம் கேப் இருக்கணும… ஏன் தெரியுமா..?