MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப பெறாதவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்று கோவை போலீசார் அறிவித்துள்ளனர்.
MyV3Ads நிறுவனம் மீது மோசடி தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சக்தி அனந்தன் என்பவர் கோவையை தலைமையிடமாக கொண்டு இந்நிறுவனத்தை நடத்தி வந்தார். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் தினசரி விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்றும், ரூ.60 முதல் ரூ.1,21,000 வரை உள்ள திட்டத்தில் பணம் செலுத்தி சேர்ந்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது.
அதன்படி, இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி உறுப்பினரானவர்கள் மூலம் இந்த நிறுவனத்திற்குள் பல கோடி ரூபாய் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலீடு செய்தவர்களுக்கு அதற்கேற்ப ஆயுர்வேத மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், முதலீடு செய்தவர்களுக்கு பணமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனத்திற்கு எதிராக புகார்கள் வந்து குவிந்தன.
அந்த வகையில், இந்த நிறுவனம் மோசடி செய்வதாக புகார்கள் வந்ததால், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தான், இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி உறுப்பினராகி, பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் பிரிவில் புகாரளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.