பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டு வைத்த குற்றவாளிகள், சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி இருந்தது தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள், தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
பெங்களூரில், ராமேஸ்வரம் கபே என்ற ஹோட்டலில், மார்ச் 1ம் தேதி குண்டு வெடித்தது. இதில், ஓட்டல் ஊழியர்கள் உட்பட, 10 பேர் படுகாயமடைந்தனர். என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குண்டு வெடிப்பை நடத்தியது, கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டத்தை சேர்ந்த முஸவீர் ஹுசைன் ஷாகிப், அப்துல் மாத்ரின் தாஹா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
‘சிசிடிவி’ பதிவுகள் வாயிலாக, குண்டு வெடித்த இடத்தில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் குற்றவாளி ஒருவர் பயன்படுத்திய தொப்பி கிடந்தது. அதன் உள்பகுதியில் தலை முடிகள் இருந்தன. இவற்றை கைப்பற்றி, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். தொப்பி, சென்னை சென்ட்ரல் பகுதியில் வாங்கப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பு குற்றவாளிகள், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கும் சென்றுள்ளனர்.
இவர்கள் போலி ஆதார் கார்டு வாயிலாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, தனியார் தங்கும் விடுதியில் தனித்தனியாக தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. குண்டு வெடிப்புக்கு முன்னரும் பின்னரும் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் சென்னையில் தங்கி இருந்த விடுதி, சென்ற இடங்கள், வணிக வளாகம், தொப்பி வாங்கிய இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று விசாரணையில் ஈடுபட்டனர். ‘சிசிடிவி’ பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது, தனியார் தங்கும் விடுதிகளின் பதிவுகளை ஆய்வு செய்ததில், போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அடையாள அட்டை இல்லாத எவரையும் தங்க அனுமதிக்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள், சென்னையில் பயன்படுத்திய, ‘சிம் கார்டு’களை உடைத்து எரித்து விட்டனர். கடைசியாக, சென்ட்ரல் பகுதியில் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. கேரளா அல்லது ஆந்திராவுக்கு தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.